ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் உக்கிரமான வான்வழித் தாக்குதல்..!

Advertisements

ஈரானில் முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்துப் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானில் மேற்குப் பகுதியிலும் நடுப்பகுதியிலும் முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அயத்துல்லா கமேனி மறைவுக்கு 40 நாள் அரசு முறைத் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று ஈரான் அரசு  அறிவித்துள்ளது. இதையடுத்துத் தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அதேபோல் தில்லியில் உள்ள ஈரானிய கலாச்சார மையத்தில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
ஈரானிலும் அரபு நாடுகளிலும் போர்ப்பதற்றம் நிலவுவதால் சென்னைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையான விமானச் சேவைகளை எமிரேட்ஸ் நிறுவனம் ரத்துச் செய்துள்ளது.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து மத்தியக் கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அட்டூழியத்தைக் கண்டித்துக் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கத்தில் கூடி சியா இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பட்காமில் பேரணியாகச் சென்றனர். ரம்பன் அமெரிக்காவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லடாக்கின் லேயில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் உத்தரப் பிரதேசம் லக்னோவிலும் சியா முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *