மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் கடவுள்களும் வாழ்கிறார்கள் என்கிறது
ஆன்மீகம். அத்தகைய கடவுள்களில் பல காவல் தெய்வங்கள், கிராமங்களில்
இன்றளவும் நள்ளிரவில் நடமாடுவதாக மக்களால் நம்பப்படுகிறது.
“நள்ளிரவில் நடமாடுகிறதா காவல் தெய்வங்கள்..?” அப்படியானால் எந்தெந்த
தெய்வங்கள் எந்த சமயத்தில், என்ன ரூபத்தில் நடமாடுகின்றன என்பது பற்றிய
பரபரப்பு பார்வை இது.
இந்து மதத்தை பொறுத்தவரை சாமிகளின் பட்டியல் ஆயிரத்தையும் தாண்டுவதாக
இருக்கிறது. முதன்மைக் கடவுளாக சிவனும், பெண் சக்தியாக பார்வதியும், காரிய
சித்திக்கு வினாயகரும், முயற்சிகள் வெற்றியடைய முருகனும், பணம் தர மகா
லட்சுமியும், கல்வி தர சரஸ்வதியும், நோய் நொடிகளைத் தீர்க்க மாரியம்மன்
மற்றும் காளியம்மன் எனவும் ஏராளமான இந்துக் கடவுள்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்று எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும்,தமிழக கிராமங்களைப்
பொறுத்தமட்டில் மனிதர்கள் குடியிருக்கும் வீட்டையும், ஊரையும் காப்பது காவல்
தெய்வங்களாகவே இருக்கிறது. இன்றளவும் கிராமத்தினர் முதலில் நம்புவது இந்த
காவல் தெய்வங்களைத்தான்..
பொதுவாக காவல் தெய்வங்கள் அனைத்துமே ஊர் எல்லையில்தான்
குடியிருக்கின்றன. காவல் தெய்வங்கள் கற்சிலைகளாகவும், களி மண்ணாலோ
சுண்ணாம்பாலோ உருவாக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்ட நிலையில் இருக்கும், காவல்
தெய்வக்கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை.
காவல் தெய்வங்கள் என்பது அய்யனார், சுடலைமாடசாமி, சங்கிலிமாடசாமி,
பலவேசக்காரன், இடும்பன்,காத்தவராயன்,முச்டையாண்டி,முனீசுவரன், முண்டசாமி,
மதுரை வீரன் என மிகப் பெரிய பட்டியல் அது.
காவல் தெய்வங்களில் அய்யனாரே முதன்மைக் காவலராக கருதப்படுகிறார்.
அய்யனார் என்பவர் மொத்தம் 218 பெயர்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..
பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர்களிடையே இருந்து வருகிறது.
குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருக்கிறது.
அய்யனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். அய்யனார் மாசி
மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தவர்.
இதனால் சிவராத்திரி அன்று அவருக்கு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
அய்யனார் இரவில் நடமாடக்கூடியவர். அவர் நள்ளிரவு 12 மணியைக் கடந்ததும்
தனது இருப்பிடத்தை விட்டுக் கிளம்புவார். இரவுப்பொழுதுகளில் பேய்த்தனமான
குதிரையில் ஏறி மின்னல் வேகத்தில் ஊரைச் சுற்றுவார். கண்ணில் படும் தீய
சக்திகளை விரட்டி கிராமத்தை வலம் வருகிறார் என்று இன்றளவும் கிராம மக்களால்
நம்பப்படுகிறது.
அய்யனாரின் பரிவாரத் தெய்வங்களில்ஒருவர் கருப்பசாமி. இவரும் நள்ளிரவானதும்
கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் ஊரை வலம் வந்து
காவல் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது…
கருப்பனார், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, நொண்டி
கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் மக்கள் கருப்பசாமியை
வழிபடுகின்றனர். மொத்தம் 108 கருப்புசாமிகள் உள்ளதாக நம்புகின்றனர்..
கருப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை
நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து
பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் என நம்பப் படுகிறது.
இதே போல் சங்கிலிக் கருப்பசாமி மிகவும் உக்கிரம் கொண்ட ஒரு காவல்
தெய்வமாவார்.இவர் நள்ளிரவில் காட்டுப் பகுதியையும், விளை நிலங்களையும் சுற்றி
வந்து பாதுகாப்பவர் என நம்பப்படுகிறது.
இதே போல் முனீசுவரர் என்பவர் வீரமும்,ஆவேசமும் நிறைந்தவர்.கிராம மக்கள்
இவரை முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து
வழிபடுவர்.முனி என்ற சொல் ரிக் வேதத்தில் ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்றும்,
பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகிறது.
முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர்
சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி
என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம் இருக்கிறது. இதே போல் நாட்டார்
தெய்வங்களில் முனி என்ற பெயரில் எண்ணற்றவர்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன.
லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி,கும்பமுனி, வால் முனி, சட்டை முனி என்று
ஏழு முனிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..
கிராம மக்கள் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே மாறு
வேடத்தில் இருப்பார்.வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று
பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
முனீஸ்வரன் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது இருப்பிடத்தை விட்டுக் கிளம்பி
காலை 5 மணி வரை ஊரைச் சுற்றி வருவார் எனவும் சில சமயங்களில் அவர் சுமார்
20 அடி உயரத்திற்கு வெண் புகைவடிவில் வலம் வருவார் எனவும் சொல்லப்படுகிறது.
காவல் தெய்வங்களில் ஒருவரான சுடலை சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால்
“சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி,
அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானதாம்.
‘மாந்த்ரீக சக்திகளுக்கு முடிவு கட்டவும், துஷ்ட ஆவிகளின் கொட்டம் அடக்கவும், முடிவு
செய்த சிவன் அதன் காரணமாக பன்றிமாடன், புலமாடன், கசமாடன், அருவாமாடன்,
ஆண்டிமாடன், உடுக்கைமாடன், கரடிமாடன், செக்கடிமாடன், , குதிரமாடன், பேச்சி மாடன்
என 61 மாடன்களை பிறவி எடுக்கச் செய்தாராம் .சுடலை மாட சாமி நள்ளிரவில்
எழுந்து நடமாடக்கூடியவர். இவர் மாறு வேசத்தில் வருவதுமுண்டாம்.
இவர்களைப் போல் தமிழகத்தில் ஒச்சாண்டம்மன்,எல்லையம்மன்,பிடாரி அம்மன்,
காட்டேரி, உச்சினிமாகாளி, முனியம்மாள், ராக்காச்சியம்மன், ஜக்கம்மாள்,
செல்லியம்மன், வீரகாத்தியம்மன் என 174 காவல் அம்மன்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள்.
பெண் காவல் தெய்வங்களில் துடி கொண்டவராக கருதப்படுகிறார் பிடாரியம்மன்
‘பிடாரம்’ என்ற சொல்லுக்கு ஆட்டிவைத்தல் என்று பொருள். பகைவர்களை ஆட்டுவித்து
ஓடச்செய்பவள் எனும் பொருளில் ‘பிடாரி’ என்ற பெயர் வந்தது என்பார்கள். பக்தர்களின்
பீடையை அழிப்பவள் என்பதால் ‘பிடாரி’ என்ற பெயர் பொருத்தம் என்றும்
சொல்வார்கள்.கோபம் என்பதையே குணமாகக் கொண்டவள் பிடாரி. காளியின் அம்சமாக
விளங்குபவள். பிடாரி பின்னே பெரும் பேய் பூதங்களும் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
இதே போல் மற்றொரு முக்கிய பெண் தெய்வமான மாரியம்மன்
முத்துமாரி,ஆங்காரமாரி எனவும் அழைக்கப்படுகிறாள்.மாரி என்றால் மழை.ஆகையால்
மழையைத்தருபவள் எனவும் அழைக்கப் படுகிறாள்.மாரியம்மனை அம்மை நோய்
ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், பொதுவாக
வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி
எனவும்அழைப்பார்கள்..இவளது கெட்டகோபத்தின் காரணமாகவே நோய்களும், தீய
விளைவுகளும் நடப்பதாக நம்பப்படுகிறது. தீய விளைவுகள் நடக்கக்கூடாதென்றே இவள்
வணங்கப்படுகிறாள். மாரியம்மனுக்கு இரவில் நடமாடும் குணமுண்டு என்பார்கள்.
இதே போல் காளியம்மன் மிகுந்த கோபமான தெய்வம் ஆகும். மக்களை பேய்
பூதங்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் காப்பாற்றுபவள்.. அங்காரம்மன் என்ற காவல்
தெய்வமும் கோபமும் அழிவுச்சக்தியும் நிறைந்த நெருப்பானவள்..இவர்கள் நடமாடும்
பொழுது எதிரே கண்ணில் படக்கூடாது என்பார்கள்.
இவை எல்லாவற்றையும் விட தற்சமயம் தமிழகத்தின் பெரும்பாலான கிராம மக்கள்
பேசிக் கொள்ளும் முக்கியச் செய்தி… இத்தகைய காவல் தெய்வங்களை மக்கள்
முன்பு போல் பய, பக்தியுடன் வணங்காமல் போனதால்தான் கொரோனா போன்ற
கண்ணுக்குதெரியாத தீய சக்திகள் எல்லாம் ஊருக்குள் உலா வந்து விட்டன
என்பதுதான்.