ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர வைத்த ஜெயலலிதாவின் மரணத்தைத்
தொடர்ந்து தமிழக அரசியல் களத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கி வருகிறது சசிகலா
பற்றிய செய்திகள்.
உண்மையில் ஜெயலலிதா – சசிகலா போல் ஒரு நட்பைக் காண்பது அறிது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் 29 ஆண்டு கால அரசியல்
வாழ்க்கையில் அவர் 16 ஆண்டுகள் பதவியிலும் 13 ஆண்டுகள் பதவியில்லாமலும்
இருந்திருக்கிறார். பதவில் இல்லாத காலங்களிலும் ஜெயலலிதாவுடன் இருந்தவர்
சசிகலா..
குறிப்பாக 1996 – 2001 கால கட்டத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குகளில்
சிக்கிக் கொண்டு திணறிய போதும் அவரை விட்டு பிரியாமல் உடன் இருந்தவர்
சசிகலா.
முன்னதாக 1996 ஜூலை முதல் 1997 ஏப்ரல் வரை அன்னியச் செலாவணி மோசடி
வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியம்
சொல்லும்படி அவருக்கு கடுமையான நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால் கொஞ்சம்
கூட பிடி கொடுக்காமல், அசையமால் அழுத்தமாக இருந்தார் சசிகலா.
இதனாலேயேதான் சசிகலாவை அதிகமாக நேசித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா ஒரு பேட்டியின் போது சசிகலா பற்றிச் சொன்ன வார்த்தைகள்
இது…”என் தோழி சசிகலா மிகவும் தவறாகச் சித்தரிக்கப்பட்டு,தவறாகவே புரிந்து
கொள்ளப் பட்டவர். அவர் எனக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும்
இருப்பதாலேயேதான் அவர் மீது விமர்சனங்கள். என்னை என் அம்மா போல்
பார்த்துக் கொண்டவர் சசிகாலா’- இப்படிச் சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா.
நிஜமாகவே ஜெயலலிதாவின் கடைசி கால கட்டங்களில் ஒரு தாயைப் போல்
உடனிருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா என்று சொல்கிறார்கள் அப்பல்லோ
மருத்துவமனை நர்சுகள்.
குறிப்பாக முதன் முதலாக மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப் பட்ட முதல்
வாரத்தில் தாங்க முடியாத வலியால் அழுதாராம் ஜெயலலிதா. அருகில் இருந்த
சசிகலா சொன்ன ஆறுதலினால் அந்த வலியைப் பொறுத்து சமாதானம் ஆனாராம்
ஜெயலலிதா.- இப்படிச் சொல்கிறார்கள் அந்த நர்சுகள்.
ஆனால் இதே ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் இடையே நடந்த மோதல்களை
யாறும் மறப்பதற்கில்லை.ஒரு கட்டத்தில் சசிகலாவை போயஸ் தோட்டத்தில்
இருந்தே வெளியேற்றினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது சசிகலா
எழுதிய ஒரு கடிதம் இப்போது நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
சசிகலா எழுதிய அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். ஒன்று “என்னுடைய
உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அக்காவுக்கு எதிரான
நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.அக்காவுக்கு
துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கும்
வேண்டாதவர்கள்தான்”என்று அவர் குறிபிட்டிருந்தது.
மற்றொன்று “என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும்
என்றோ,கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ,சட்டமன்ற ,
நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய
வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசை
இல்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற ஏண்ணமே எனக்கு இல்லை.
அக்காவுக்கு உன்மையான தங்கையாக இருக்க மட்டுமே விரும்புகிறேன்” என்று
குறிப்பிட்டிருந்தது.
இப்போது நிலைமை என்ன? ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக
தலைவி மட்டுமல்ல… வருங்கால முதலமைச்சர் எனப் பதவி வியூகங்கள்
மட்டுமல்ல. ஜெயலலிதா யாரையெல்லாம் துரோகிகள் என்று நினைத்தாரோ
அவர்கள் அனைவருமே சசிகலா அருகில் அமர்ந்து ஆலோசனை சொல்வதாக
செய்திகள் தீயாகப் பரவுகின்றன.
உண்மையில் சசிகலா முதல்வராக முயற்சிக்கும் திட்டங்கள் எவையும்
பொய்யில்லை.அவை பக்காவாக தீட்டப்பட்ட திட்டங்கள். ஜெயலலிதா மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்ட முதல் மாதத்திலேயே அவர் பல விசயங்களுக்கு
தயாராகி விட்டதாகச் சொல்லுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு எம் எல் ஏ சீட்
கொடுக்க கூடாது என்று சொன்னவர்தான் சசிகலா. அவை எல்லாவற்றையும் மறந்து
இப்போது ஓ.பி. எஸ் சசிகலாவை மனதார ஆதரிக்கிறார் என்பதில் இருந்தே
எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
இப்போதிருக்கும் சூழ்நிலையில் எடப்பாடியால் மட்டுமே கட்சியை வழி நடத்தவும்
தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெறவும் முடியாது என்பது அனைவரும்
அறீந்த விஷயம்தான்… எடப்பாடியுடன் ஓபிஎஸ் டிடிவி சசிகலா என அனைவரும்
ஒன்று சேர்ந்தால் மட்டுமே அதிமுகவுக்கு விடியல் …அந்த நாளத்தான் எதிர் நோக்கி
காத்திருக்கிறார் சசிகலா
இவ்விதம் அதிமுகவினர் ஒட்டு மொத்த ஆதரவைப் பெற்ற பிறகு மக்கள் மனதில்
இடம் பிடிக்கும் திட்டமும் சசிகலா கைவசம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
“மக்களால் நான்: மக்களுக்காக நான்” என்ற ஜெயலலிதாவின் கோட்பாட்டை
கொஞ்சம் புதுப்பித்து “மக்கள் வழியில் அம்மா: அம்மா வழியில் நான்” எனப்
புறப்படக் காத்திருக்கிறார் சசிகலா.
முதல் கட்டமாக ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட்டில்
ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம், அதிமுக சார்பில் தமிழகத்தில் 4 முக்கிய
நகரங்களில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பது ஆகிய திட்டங்களை கையில்
வைத்திருகிறார் சசிகலா.
இதன் பின்னர் மக்கள் விரும்பிய வகையில் டாஸ்மாக் கடைகளை அகற்றப்
போவதாக அறிவிப்பது,அம்மா உணவகங்களில் மினி மீல்ஸ் உள்பட
நவீனப்படுத்துவது, பேருந்துக் கட்டணத்தைக் குறைப்பது என மக்கள் நலத்
திட்டங்களை அறிவித்து ஓட்டுக்களை வாங்குவது போன்ற தேர்தல் யுக்திகளும்
அவரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் வழி,வகை வைத்திருக்கிறார். ஒரு கை பார்க்கத்தான் போகிறார்
என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.