
16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாடும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

இதுவரை இந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ள 3 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் குவாலிபயர் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடைசி லீக் போட்டியில் கூட முக்கிய வீரர்களுக்குகூட ரெஸ்ட் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை களமிறக்கினார். இதன் மூலமாகவே குஜராத் எந்தவிதமான ஆட்டத்தை ஆடும் என்று தெரிந்து கொள்ளலாம். அதோடு சென்னை அணிக்காக நீண்ட காலம் ஆடிய மோகித் சர்மா, பயிற்சியாளர் நெஹ்ரா, சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அணிக்காக ஆடி வரும் சாய் கிஷோர், சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் குஜராத் அணியில் உள்ளனர்.
இதனால் சேப்பாக்கம் பிட்சில் ஏற்படப்போகும் மாற்றங்களை குஜராத் அணி நிச்சயமாக அறிந்து வைத்திருக்கும். ஆனால் குஜராத் அணியின் வெற்றியில் சுப்மன் கில், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர் ஆகியோர் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அவர்களை சிஎஸ்கே வீரர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர். நடப்பு சீசனில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்ததே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
