பெற்றெடுத்த தாய், தந்தை …உயிராக நேசிக்கும் காதலன், காதலி …வாழ்க்கை பந்தமாகும்
கணவன், மனைவி…. சொந்தங்களாகிய உறவினர்கள் ஆகியோரை விடவும் ஒருவரது
வாழ்க்கையில் நண்பன்தான் “பெஸ்ட்” என ஆராய்ச்சி செய்து
முடிவுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
நட்புறவு குறித்த ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கும் அறிவியல் பத்திரிக்கையாளர் லிடியா
டென்வொர்த், ஒருவர் தனிமையில் அடைபட்டுக்கிடக்கும்போது அவருடைய நோய்
எதிர்ப்பு சக்தி குறைவதாகத் தெரிவிக்கிறார். தனிமையில் சிக்கிக் கிடக்கும் போது
ஒருவரது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் தங்களது செயல்பாட்டை மாற்றிக்
கொள்வதாகவும் அதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதாகவும்கூறுகிறார்.
பெரும்பாலும் நண்பர்களுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு நல்ல உடல் நலம், நீண்ட
ஆயுள் மேலும் நட்புறவின் மூலம் நல்ல தூக்கம் கிடைப்பதுடன், நோய் ஏற்படும் போது
விரைவில் குணமடையும் வாய்ப்பும் அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது
தனிமை என்பது ஒருவர் சுறுசுறுப்பாக இயங்குவதை பாதிக்கிறது என்றும், உடல் நலப்
பிரச்சினைகளை அதிகரிக்கிறது என்றும் வடக்கு லண்டனில் செயல்படும் ஒரு தன்னார்வ
அமைப்பின் மேலாளரான டோன்னா டர்ன்புல் தெரிவிக்கிறார். மேலும், நண்பர்களுடன்
பழக்கவழக்கங்களைக் குறைத்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றவும்
முடிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஒருவர் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருக்கும் போது, குடும்ப உறுப்பினர்களை
விட நண்பர்கள் அவரை அன்புடன் கவனித்துக் கொண்டால் அதில் மிகப்பெரும் பயன்
கிடைப்பதாக அமெரிக்காவின் க்ளேர்மான்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்
உளவியல் நிபுணரான சைதா ஹேஷ்மதி மற்றும் அவரின் சக பணியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
குடும்ப உறவுகளை விட நட்புறவில் பெரும் பயன்கள் இல்லை என்று காலம் காலமாக
நம்பப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிகள், நண்பர்களின்
உறவு மிகவும் முக்கியம் என்பதை தற்போது உணர்த்துகின்றன. இந்த இரண்டு
வகையான உறவுகளில் நண்பர்கள் உடனான உறவை எப்போதும் புறம் தள்ளக்கூடாது
என லிடியா டென்வொர்த் எச்சரிக்கிறார்.
சில நேரங்களில், திருமணம் அல்லது குடும்ப பந்தங்களை விட நண்பர்களுடனான
உறவுகள் கூடுதல் நன்மைகளை அளிக்கின்றன என்பது ஏற்கெனவே
நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 97 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், வயது
முதிர்ந்தவர்களுக்கு குடும்ப பந்தங்களை விட நண்பர்கள் உடனான உறவுதான் அதிக
உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்பது தெரியவந்துள்ளது
நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் நட்புறவு மிக முக்கியம் என
தெரியவந்துள்ளது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சோதனையின் போது அதிக
நண்பர்களைக் கொண்டவர்களின் மூளையில் நன்மைகளை ஏற்படுத்தும் மாறுதல்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதியிலும் இது போல் நேர்மறையான
மாற்றங்கள் ஏற்படுவதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
யாருக்கு உதவ வேண்டும் என பலரிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, நண்பர்களுக்கு
உதவவேண்டும் என பதில் கூறியவர்களின் மூளைப் பகுதியில் அதிக மகிழ்ச்சி
பதிவாகியிருந்தது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட கால நட்பில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய இளம் வயதினரின்
மூளைப் பகுதியில் இந்த மாற்றங்கள் மிக அதிகமாக இருந்ததாக நெதர்லாந்து நாட்டின்
லெய்டென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் பெர்னா குரொக்லு
தெரிவித்துள்ளார்.
நட்பு என்பது சிறுவயதில் இருந்தே ஏற்பட வேண்டும். சிறு வயது முதல் இளம் வயது
வரையிலான நட்பு என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தர வல்லது. நட்பு
என்பது நல்ல நண்பர்களை கொண்டதாக இருக்க வேண்டும் .இல்லை என்றால் அதே
சமயத்தில் நண்பனால் கேடுகளும் விளையும் கவலைகளும் ஏற்படும் என்றும் ஆய்வில்
தெரிவித்திருக்கிறார்கள்