இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 23-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கைகள் கேட்கப்பட்ட நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
மல்யுத்தக் கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைத் தொடங்க ஒரு தற்காலிகக் குழு இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது என தெரிவித்த அவர், விளையாட்டு வீரர்களுக்கான சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டதோடு, விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும், சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.