அன்புள்ள, துர்காவுக்கு… இப்படிக்கு, மு.க. ஸ்டாலின்…மனதை நெகிழ வைக்கும் “இன்லெண்ட் லெட்டர்”

Advertisements

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்… “முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் எனும் நான்.. “ என்று மு.க.ஸ்டாலின் சொல்லி நிறுத்தி, தனது முகத்தை
உயர்த்திப் பார்த்தபோது, அவரது மனைவி துர்காவோ பொல, பொலவென கண்
கலங்கி சேலை முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்…இருக்காதா
பின்னே…? இந்த பதவியை அடைவதற்காக மு.க.ஸ்டாலின் இரவு, பகலாக பட்ட
கஷ்டங்கள்தானே அந்த சமயத்தில் நினைவுக்கு வரும்… எத்தனை கால கஷ்டங்கள்,
போராட்டங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், விரோதங்கள். அது துர்கா
மட்டுமே புரிந்தது . ஒரு வேளை மிசா கால சிறை அனுபவங்கள் கூட அவரது
நினைவுக்கு வந்திருக்கலாம்.
மறைந்த கலைஞர் கருணாநிதி, கணவர் மு.க.ஸ்டாலின் இருவரும் சந்தித்த
போராட்டங்கள் அனைத்தையும் நேரில் பார்த்து வளர்ந்தவர் துர்காவதி . ஒரு மனைவி
என்கிற ரீதியில் துர்காவின் மிகப் பெரிய கனவு ஸ்டாலின் அரசியலிலும், ஆட்சியிலும்
உச்சம் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும்.. இப்போது இரண்டையும்
தொட்டு விட்டார் ஸ்டாலின்.
அவருடன் 46 ஆண்டு காலம் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கும் துர்காவதி
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா..? நாகை மாவட்டம் திருவெண்காடுதான்
துர்காவதியின் சொந்த ஊர். தந்தை ஜெயராமன் ஆசிரியராக இருந்தவர். தாயார்
சுசீலா. துர்காவதிக்கு 2 சகோதரிகள், ஒரு சகோதரர். 1975-ம் ஆண்டு அக்டோபர்
மாதம் 20-ம் தேதி துர்காவதி- ஸ்டாலின் திருமணம் நடந்தது.
துர்காவதிக்கு “சாந்தா” என்ற பெயரும் உண்டு. அந்தப் பெயரைச் சூட்டியவர் கலைஞர்
கருணாநிதி… துர்காவதி என்பது சாமி பெயராக இருப்பதால் அதனை மாற்ற வேண்டும்
எனக் கலைஞர் முடிவு செய்து வேறு என்ன பெயர் வைக்கலாம்? என்பது பற்றியும்
ஆலோசித்து வந்தார். இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மிசாவின் கீழ் சிறைக்குச்
செல்லவே, அந்தக் கால கட்டத்தை மிகப் பொறுமையுடன் கையாண்டார் துர்கா.

இதனைக் கவனித்து வந்த கலைஞர் துர்காவதிக்கு “சாந்தா” என்ற பெயரைச்
சூட்டினார்.
சரி..துர்காவதி என்ற பெயரை வைத்தது யார்..? அவரது தாத்தா சாரங்கபாணிதான்
இந்தப் பெயரை வைத்தார். “வீட்டுக்கு தலைக் குழந்தையாக பிறக்க இருக்கிறதே…
அதுவும் வெள்ளிகிழமையாச்சே” என்ற வேண்டுதலின் பெயரில் இந்தப் பெயரை
வைத்தாராம்.
புகுந்த வீடான கோபாலபுரம் வீட்டில் மு.க. ஸ்டாலின் இவரை அழைப்பது ‘துர்கா’
என்ற பெயரைச் சொல்லித்தான். ஆனால் அவரைத் தவிர மற்ற எல்லோருக்கும்
இவர் “சாந்தா”தான்..
துர்கா ஸ்டாலின் தனது இல்லற வாழ்க்கையின் பல அனுவபவங்களை “உயிர்மை”
பதிப்பகம் வெளியிட்டுள்ள “அவரும் நானும்” என்ற புத்தகத்தில் நிறையவே
எழுதியிருக்கிறார். இதோ துர்காவதி ஸ்டாலின் பேசுகிறார்.
துர்காவதியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் 16 வயதில் தனக்குத்
திருமணமான 5 வது மாதத்திலேயே ஸ்டாலின் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட…
அவர் சிறையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து ஓராண்டு கழித்து வீடு
திரும்பும் வரை பட்ட மனத் துயரங்கள்தாம். அது பற்றி மனம் திறக்கிறார்…
அன்றைய தினம்..காலையில் எழுந்திருக்கும்போதே கோபாலபுரம் வீட்டின் நிலை மிக
வித்தியாசமாக இருந்தது. சாதாரணமாவே நான் ஏதாவது ஒண்ணுன்னா பட்னு அழ
ஆரம்பிச்சுடுவேன்.. சினிமா காட்சிகள்ல யாரையாவது கைது செய்றது, ஜெயிலுக்குப்
போறதுன்னு வந்தாலே தாங்க முடியாம நான் அழுதுடுவேன்.இப்பத்தான் கல்யாணமான
நிலைமையில் எங்க வீட்டுக்காரங்களுக்கே அந்த நிலைமைன்னதும் எனக்கு அழுகை
முட்டிட்டு வருது..
கல்யாணமாகி இன்னும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் சரியா பார்த்து பேசிக்கலை..முழுசா
அஞ்சு மாசம்தான் முடிஞ்சிருக்கு.. இப்பத்தான் ஒரு நெருக்கம் முகிழ்ந்து வர்ற நேரம்..
அதுக்குள்ள வீட்டுக்காரங்களுக்கு ஜெயில்னா,,,? என்னதான் இது அரசியல் குடும்பமா
இருந்தாலும் எப்படிப் பதறாம இருக்க முடியும்?
நான் விம்மி அழறதைப் பார்த்ததுமே இவங்க ‘நீ அழக்கூடாது.. நான் ஊருக்கு எங்காவது
போனா 10 நாள் பிரிஞ்சு இருக்க மாட்டியா? அதுபோல நெனச்சுக்கோ, அப்பா கல்லக்குடி
போராட்டத்தப்போ கைதான சமயத்தில் அம்மா எத்தனை திடமா மன உறுதியோட நின்னு
அனுப்பி வச்சாங்க தெரியுமா? நீயும் என்னை மன உறுதியோட அனுப்பி வை.. நான்

சீக்கிரமே வந்துருவேன்..’ன்னு தன் கைகளை என் கைகள்ல இருந்து
விடுவிச்சுக்கிட்டாங்க..
அதையெல்லாம் விட வீட்ல எல்லோரையும் கலங்க வச்சது மிசா கைதியாக உள்ளே
போகும் இவங்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தப் போறாங்களோ என்ற
நிலைமைதான்!…இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, கைதானவங்களை
எங்கே வச்சிருக்காங்கன்னே தகவல் தெரியாத ஒரு கொடுமைதான். எங்க
வீட்டுக்காரங்களைக் கைது பண்ணி கொண்டுட்டுப் போனதுதான் தெரியும். ஒரு
வாரம்…பத்து நாள்… இருபது நாள்னு ஆச்சு… எங்கே கொண்டுபோய் வச்சிருக்காங்க, எப்படி
இருக்காங்கன்னு எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது.
‘ரொம்ப அடிச்சுத் துவைச்சுட்டாங்களாம். உசிரோடத்தான் வச்சிருக்காங்களா..
இல்லையா’ன்னே தெரியலே!’ன்னு அப்பப்போ நிறைய தகவல்கள் வரும்.. ஒவ்வொரு
தகவலும் நடுங்க வைக்கும்.கணவர் இருக்காரா? எங்கே இருக்கார்? எப்பிடி இருக்கார்னு
கூட தெரியாத ஒரு நிலையில் புதுசா கல்யாணம் பண்ணின ஒரு இளம் மனைவியின்
மனநிலை எப்பிடி இருக்கும்? நான் அந்த நிலையில்தான் இருந்தேன்..உடலில் உசிர்
மட்டும் ஓடிட்டு இருந்தது! இப்படித் தவியா தவிச்சுட்டு இருந்த நேரத்தில், அப்படியே
ஸ்விட்ச் போட்டதுபோல கண்ணுல இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக்கிட்டே
இருக்கும்!
நான் எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி யோசிச்சா எங்கே அழ ஆரம்பிச்சுடுவேனோன்னு
வீட்ல எப்பவும் யாரவது என் கூட பேசிட்டே இருப்பாங்க.. நானும் ஏதாவது வேலை
எடுத்துப் போட்டு செஞ்சுட்டே இருப்பேன். நான் என்னுடைய மனசை எப்படியெப்படியோ
திசை திருப்பினாலும்கூட, கடைசியில் இவங்க என்ன நிலைமையில் இருக்காங்களோ,
சாப்பிட்டாங்களோ, தூங்கினாங்களோன்னு இந்த சிந்தனையில் வந்து நிற்கும்.
என்னை ரொம்ப தொந்தரவு பண்ணினது, கன்னபின்னான்னு மிருக அடி அடிச்சுட்டாங்க
அப்படின்னு கேள்விப்பட்டதுதான்! இவங்க எப்படி இதைத் தாங்கினாங்க. எப்படி
இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கவும் வழியில்லாம நாட்கள் போயிட்டிருந்த அந்த நிலைமை,
நிஜமாவே நரகம் மாதிரிதான் இருந்தது.
இவங்க நல்லபடியா இருக்கணும்னு வேண்டிகிட்டு நான் ஒரு பெரிய நோட்டு முழுக்க ஸ்ரீ
ராமஜெயம் எழுத ஆரம்பிச்சேன்..கைதான தினத்தில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம்
கழிச்சு இவங்க வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் தினமும் விடாம நோட்டு முழுக்க ஸ்ரீ
ராமஜெயம் எழுதி முடிச்சேன்.அதேபோல காலைல எழுந்ததுமே கோபாலபுரம் வீட்டுக்கு
பக்கத்தில் இருக்கிற கிருஷ்ணன் கோவிலுக்குப் போயிடுவேன். எனக்கு மனசுக்கு ரொம்ப

அமைதி தர்ற இடம் அது. அங்கே போய் கை கூப்பிட்டு கண்ணை மூடிட்டா அப்பிடியே என்
கண்ணுல இருந்து அருவியா கொட்டும்.
செல்வி அண்ணி ‘வா, நாம கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்’னு என்னை
மயிலாப்பூர் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அந்த ஒரு வருஷமும் தினமும்
சாயங்காலம் ஆனாப் போதும், நாங்க ரெண்டு பேரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயிலுக்குப் போய் வருவோம்!
யாராவது எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி ஏதாவது ஒரு சின்ன தகவல் சொல்ல
மாட்டாங்களா…அவங்க எங்க இருக்காங்கன்னு ஏதாவது சேதி வராதான்னு நான்
அலைபாய்ஞ்சுட்டு இருந்த அந்த நாட்கள்ல இவங்க கைதான இருபத்தி நாலு நாள் கழிச்சு
ஒரு போஸ்டல் கார்டு வந்துச்சு. “நாங்க சென்னை மத்திய சிறையில்தான் இருக்கோம்..
எங்களைப் பத்தி கவலைப்பட வேண்டாம்”னு ரெண்டே வரியில் இவங்க கையெழுத்தோட
ஒரு கார்டு.. அவ்வளவுதான்! எனக்கு அப்படியே எங்க வீட்டுக்காரங்களையே நேர்ல பார்த்த
மாதிரி ஒரு பரவசம் வந்துச்சு அந்தக் கடிதத்தைப் பார்த்ததுமே!
இதன் பிறகு சிறையில் இருந்தபடி அவங்க தொடர்ந்து கடிதங்கள் எழுத
ஆரம்பிச்சாங்க.. நாங்களும் குடும்பத்தோடு பதில் கடிதம் எழுதுவோம்… அந்த
கடிதங்கள் எல்லாம் என்னால் மறக்க முடியாது. அவங்களுக்கு பதில் கடிதம் எழுதும்
பொழுது வீட்ல எல்லோரும் ஆளுக்கொரு லெட்டர்ல எழுத முடியாது.. அத்தை
ஒரேயொரு இன்லேண்டு லெட்டர்தான் வாங்கித் தருவாங்க.மாமா முதல்ல ஒரு நாலஞ்சு
வரி கடிதம் எழுதுவாங்க.. ‘அன்பு மகன் ஸ்டாலினுக்கு’ன்னு ஆரம்பிச்சு ‘நீ
நல்லாயிருக்கியா? நாங்க இங்க நல்லாயிருக்கோம்’னு அவங்க சொல்லச் சொல்ல
செல்வியண்ணிதான் எழுதுவாங்க.. ‘அப்புறம் நான் எழுத எனக்கு ஒரு பாரா அளவுக்கு
இடம் கிடைக்கும்! ‘அன்புள்ள அத்தானுக்கு..’ன்னு ஆரம்பிப்பேன். உடனே கண்ணுல
இவங்க முகம் வந்து சிரிக்கும். எத்தனை நாளாச்சு அவங்க முகத்தைப் பார்த்து? எத்தனை
நாளாச்சு இவங்க பேசக் கேட்டு.. தோணுறப்போவே மனசு நெகிழ்ந்து போய் எனக்கு
கண்ணுல தண்ணியா கொட்டும். ரொம்பக் கட்டுப்படுத்திட்டுதான் எழுதுவேன்.
அதிலேயும் சிறையில் சிறை அதிகாரிகள் எல்லாம் படிச்சுப் பார்த்துவிட்டுத்தான்
கடிதத்தைத் தருவாங்க அப்படிங்கிறதால என் உணர்வுகள் எதையும் கடிதத்தில் கொட்ட
முடியாது! ‘நீங்க நல்லாயிருக்கீங்களா? நா இங்கே நல்லா இருக்கேன்’னு நலம்
விசாரிச்சுட்டு விட்டுடுவேன். தவிர அந்த ஒரு பாராவில் வேற என்ன எழுத முடியும்?
இப்படி எங்க வீட்ல யார் யார் இவங்களுக்கு லெட்டர் எழுத ஆசைப்படறாங்களோ,
எல்லோரும் அந்த இன்லேண்டு லெட்டரில் ஆளுக்கொரு பாரா எழுதி அனுப்பி

வைப்போம். பதிலுக்கு எங்க வீட்டுக்காரங்களும் உடனே லெட்டர் போடுவாங்க.
அவங்களும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, என் பேர்னு ஒருத்தர் விடாம
குறிப்பிட்டு எழுதி நலம் விசாரிப்பாரு.
இவங்க கடிதம் பார்க்கிறப்போ கிடைக்கிற பரவச உணர்வே தனிதான். நேர்ல
பார்க்கிறப்போகூட பக்கத்தில் மற்றவங்க இருக்காங்க அப்டீங்கிறதால் முகம் பார்த்துப்
பேசமாட்டோம். ஏன், கூச்சத்தில் பேசக்கூட மாட்டோம். ஆனா, அதுவே இவங்க கடிதம்
அப்டீங்கிறப்போ, அதை அப்பிடியே எடுத்துட்டு என் அறைக்குப் போயிட்டேன்னா, ஏதோ
அந்தக் கடிதத்தோட எழுத்துக்களே இவங்களா மாறி என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற
மாதிரி ஆயிடும் எனக்கு! அந்த எழுத்துக்களையே அப்பிடியே பார்த்துட்டுக் கலங்கிட்டு
இருப்பேன்..
நான் அப்பப்போ கலங்கிட்டு நிற்கிறதைப் பார்த்துட்டோ என்னவோ என் கொழுந்தனார்
தமிழரசு “அண்ணி.. நீங்க உங்க மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டி அண்ணனுக்கு
லெட்டர் எழுதிக் கொடுங்க.. அண்ணன் உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.சுக்கு வர்றப்போ
எப்படியாவது அவர் கையிலேயே அதை நேரா சேர்ப்பிச்சுடறேன்.. கவலைப்படாதீங்க..
நான் படிக்க மாட்டேன்.. ஜெயிலர் கைக்கும் போகாது..நல்லா மனசு விட்டு
எழுதுங்க”ன்னார் ஒருநாள். ‘நிஜமாவா’ன்னேன் நான் மலர்ச்சியோடு. “பின்னென்ன?
பொய்யா சொல்றேன். போங்க எழுதிட்டு வாங்க” என்றார் தமிழரசு. என்னால என்
வாழ்க்கையில மறக்க முடியாத ஒருத்தர் எங்க கொழுந்தனார்.
இரவு விடிய விடிய என் அறையில் உட்கார்ந்து ஒரு பேப்பரில் எழுத ஆரம்பிச்சேன்.
இதுதான் எங்க வீட்டுக்காரங்களுக்கு தனிப்பட்டு நான் மட்டுமே எழுதற முதன்முதல்
கடிதம்.. எல்லாத்தையுமே எழுதிடணும் போல இருக்கு..ஆனா என்ன எழுதணும்னு
தெரியலே.. எவ்வளவு நேரம் இப்பிடியே விழிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன்னும் தெரியலே..
எழுதிக் கிழிச்சு, மறுபடி எழுதிக் கிழிச்சு இப்பிடியே எழுது எழுதுன்னு எழுதித் தீர்த்தேன்.
என்ன எழுதினாலும் என் உணர்வுகளை முழுக்கச் சொன்னது மாதிரியே இல்லே!
ஒரு வழியா நான் எழுதி முடிக்கிறப்போ விடிஞ்சுருச்சுன்னுதான் சொல்லணும்.சரியா
விடிகாலையில் தினமுமே என் கொழுந்தனார் ஜெயில் பக்கம் கிளம்பிடுவார்.
“எழுதிட்டீங்களா அண்ணி.. குடுங்க”ன்னு அவர் கிளம்பி நின்னு கேட்டதும் ஓடிப்போய்
நான் ரெடி பண்ணி வச்சிருந்த கவரைக் கொண்டு வந்து கொடுத்தேன்.அதைப்
பார்த்தவுடனே என் கொழுந்தனாருக்கு சிரிப்பு வந்திடுச்சு! எழுதின பேப்பரை கவர்ல
போட்டு, அதை வேறொரு கவர்ல போட்டு ஒட்டி, மறுபடி அதை இன்னொரு கவர் தேடி
போட்டுத் தந்தேன்.

“பயப்படாதீங்க அண்ணி.. நான் போறப்போ ஏதும் படிக்க மாட்டேன்”ன்னு கிண்டலடித்துக்
கொண்டே வாங்கிக் கொண்டு போனார். அவர் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்ததற்கு
அடுத்த நாளே எங்க வீட்டுக்காரங்க கிட்டேயிருந்து பதில் கடிதம் வாங்கிட்டு வந்து தந்தார்.
அப்போ சிறையில யாராவது ஒருத்தர் உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.க்கு வருவாங்க.
அவங்ககிட்டே எங்க வீட்டுக்காரங்க லெட்டர் தந்தனுப்புவாங்க. அவங்ககிட்டே இருந்து
என் கொழுந்தனார் வாங்கி வந்து எனக்குத் தருவார்!
இப்படியே நான் எழுதற கடிதம் எங்க வீட்டுக்காரங்களுக்கும், அவங்க எழுதற கடிதம்
எனக்கும் வந்து சேரும்! யாருக்கும் தெரியாம அதை வாங்கிட்டு என் ரூமுக்குப் போய்
கதவை மூடிட்டுப் படிப்பேன்..அய்யோ!.. அந்த நிமிஷங்கள் நெகிழ்ச்சியும், அழுகையும்
பரவசமும், காதலும் பொங்கி வழியும் ஆனந்த நிமிஷங்களா இருக்கும்!
பகல்ல என் ரூம் கதவைத் தாழ் போட்டுட்டுப் படிச்சா சரியா வராதுன்னு ராத்திரியில்தான்
நிதானமா படிப்பேன்.. படிச்ச அதே பரவசத்தில் உடனே திரும்ப அவங்களுக்கு அடுத்த
லெட்டர் எழுத உட்கார்ந்திடுவேன்.. அதே போல எழுதிக் கிழிச்சு, மறுபடியும் எழுதி கவர்
மேல் கவர் போட்டு ரெடியா வச்சிடுவேன்.கொழுந்தனார் போறப்போ மறக்காம
வாங்கிட்டுப் போயிடுவாங்க.
பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ மாத்தி மாத்தி ஒருத்தருக்கொருத்தர் லெட்டர்லாம்
எழுதி லவ் பண்ணிட்டுத்தான் அப்புறம் கல்யாணம்னு பண்ணிப்பாங்க. ஆனா, எங்க
வாழ்க்கையில் நாங்க கல்யானம் ஆனப்புறம் காதலர்களா மாறிட்டோம்.. மாத்தி மாத்திக்
கடிதங்கள் எழுதி, அடுத்த கடிதம் எப்போ வரும்..அடுத்து எப்போ இனி இவங்களை
சந்திக்கிறதுன்னு காதல் வாழ்க்கைக்குரிய அந்த த்ரில்லை அந்தப் பிரிவு நேரத்தில்
அனுபவிச்சோம்.
அப்போ நான் இவங்களுக்கு எழுதின கடிதங்களையும் சரி, இவங்க எனக்கு எழுதின
கடிதங்களையும் சரி அப்படியே பத்திரமா இப்போ சமீப காலம் வரைக்கும் வச்சிருந்தேன்.
அப்பப்போ எடுத்து படிச்சுப் பார்த்துட்டு இருப்பேன். வேளச்சேரி வீட்ல இருந்து
ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு மாறினப்போதான் ‘பிள்ளைங்க எல்லாம் வேற
பெரிசாயிடுச்சே! அரசியல் குடும்பத்திலே வீட்டுக்கு வர்ற வேற யார் கண்ணுலயும் நம்ம
பர்சனல் கடிதம் பட வேண்டாமே’ன்னு மனசே இல்லாம கிழிச்சுப் போட்டேன்! மற்ற
கடிதங்கள் எல்லாம் இன்னும் இருக்கு!
அந்த சமயம் இவங்க எழுதின பெரும்பாலான லெட்டர்கள்ல எல்லாம் ‘நீ சந்தோஷமா
இரு” அப்டீங்கறதைத்தான் மாத்தி மாத்தி எழுதியிருப்பாங்க.

1977 ஜனவரி 31 அன்னிக்கு இவங்களை ரிலீஸ் பண்ணாங்க.ரொம்ப நாள் கழிச்சு எங்க
வீட்டுக்கு உயிர்வரப் போற மாதிரி எனக்குள்ளே ஒரு பீலிங்.‘எப்படா ஒருத்தரை ஒருத்தர்
பார்ப்போம்’ன்னு காதலர்கள் ஏக்கப்படற மாதிரி ஒரு நிலையில் நாங்க அப்போ
இருந்தோம்…
கல்யாணத்துக்கு முந்தின தினத்தில் ஒரு பொண்ணுக்கு ஏற்படற மாதிரியான வெட்கம்,
படபடப்பு, பரவசம், பயம், மகிழ்ச்சின்னு விதவிதமான உணர்வுகள் எனக்குள்ள.
இப்படிப்பட்ட உணர்வுகளில் சிக்கின நான் எங்கிருந்து அன்னிக்கு ராத்திரி தூங்க?
கனவுகளும், நினைவுகளுமா ராத்திரி முழுதும் ஓடிப்போயிடுச்சு! விடிகாலைல
எழுந்ததும் குளிச்சுட்டு முதல்ல கோபாலபுரத்தில் எங்க வீட்டுக்கு அருகில் இருக்கும்
கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கும்பிட்டுட்டு வந்தேன். யப்பா!… இந்த
கிருஷ்ணன்கிட்டேதான் எத்தனை வேண்டுதல்கள் வச்சிருப்பேன்? எத்தனை அழுகை?
எத்தனை விம்மல்!… நன்றி சொல்ல வேண்டாமா கிருஷ்ணனுக்கு!
இவங்க வந்ததும் அன்னிக்கு சாயங்காலமே மறக்காம மயிலாப்பூர் கற்பகாம்பாள்
கோயிலுக்கு நானும் செல்வியண்ணியும் முதன் முறையா மனசு நிறைய
சந்தோஷத்தோட போயிட்டு வந்தோம்! இவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச மீன்குழம்பு
சமையல் அன்னிக்கு! கலகலன்னு திருவிழா மாதிரி அன்னிக்கு வீடே ஒரே கூட்டமா
இருந்தது.
இவங்க ஜெயிலுக்குப் போறப்போ எப்பிடி வீட்லேயும் தெரு முழுக்கவும் ஜேஜேன்னு
மனுஷங்க நிறைஞ்சிருந்தாங்களோ, அதே போல இப்பவும் நிறைஞ்சிருந்தாங்க… ஒரே
வித்தியாசம். அப்போ அழுகை… இப்போ மகிழ்ச்சி!
அன்னிக்கு (23.01.1977) அதிகாலை இவங்க விடுதலையாகி ஜெயில்ல இருந்து வந்து
அண்ணா சமாதிக்குப் போய், பிறகு சிட்டிபாபு வீட்டுக்கு போய் விட்டு, வீட்டுக்கு
வந்தாங்க. தன் அப்பாவை (கலைஞர்) கும்பிட்டு வாழ்த்து வாங்கிட்டு எல்லோரையும்
விசாரிச்சுட்டு அப்புறம்தான் எங்க பக்கம் வந்தாங்க. பார்த்துப் பேசி ரொம்ப நாளான
கூச்சத்தில் நான் இவங்களை நேரா பார்க்க முடியாம கடைக்கண்ணால பார்க்க… சரியா
பிடிச்சுட்டாங்க மல்லிகா அண்ணி.
“என்ன சாந்தா… மறுபடி இன்னிக்குத்தான் உங்களுக்குக் கல்யாணம் ஆனமாதிரி இருக்கா?
ஒரு வருஷம் கழிச்சு மறுபடி உங்க வீட்டுக்காரரோட தனியா இருக்கப் போறோம்!…
நடக்கட்டும் நடக்கட்டும்!”னு பயங்கரமா கிண்டல் பண்ண, அந்த இடமே மகிழ்ச்சியில்
பூத்துப் போச்சு ..என் மனசு மாதிரியே!

ஒரு மனைவியா எங்களோட இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் எங்க
வீட்டுக்காரங்களைப் பத்தி அபிப்ராயம் சொல்றதா இருந்தா இவங்களைப்
பொறுமைசாலின்னுதான் சொல்வேன்.அதுக்காக எங்களுக்குள்ள சண்டை சச்சரவு
வராதுன்னு எல்லாம் நினைச்சுடாதீங்க. நிறைய வரும்.. பசங்களைக் கண்டிச்சு
வளர்க்கணும்பேன் நான்.. சில விஷயங்கள்ல பசங்களைத் திட்டிடுவேன். நல்லா
அடிக்கக்கூட அடிச்சிடுவேன்…
ஆனா பசங்களை ப்ரீயா சிந்திக்க விடும்பாங்க இவங்க. பசங்களுக்குத் தேவைப்படற
உதவியைத் தன் தூக்கத்தைக்கூட தொலைச்சுட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து செஞ்சு
தருவாங்க.. என்னால அதெல்லாம் முடியாது.
பசங்களை வளர்க்கிற இந்த விஷயத்தில் ஆரம்பிச்சு நாங்க சேர்ந்து வெளியில
போறதுன்னு பல விஷயங்கள்ல நாங்க ரெண்டு பேரும் அப்பப்போ முட்டிக்கிட்டு
சண்டைக்கு நிப்போம். ஆனா அதில பார்த்தீங்கன்னா, நிலைமை சீரியஸாகாம
பொறுமையா அதை ஹேண்டில் பண்றது கடைசியில் எங்க வீட்டுக்காரங்களாத்தான்
இருக்கும். விட்டும் தருவாங்க.. பெரும்பாலான சமயங்களில் பொறுமையாப் பேசி
எனக்குப் புரியவும் வச்சிடுவாங்க.இவங்களோட இந்தப் பொறுமையும், சகிப்புத்
தன்மையும்தான் மிசா சமயங்கள்லகூட அந்தக் கஷ்டங்களை இவங்க சுலபமாக
தாங்கிக்க வச்சதுன்னு நெனைக்கிறேன் என்று மனம் நெகிழ்கிறார் துர்காவதி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *