குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான குவாலிபயர்-1 ஆட்டத்தில், ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறி அசத்தியது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.
36 பந்தில் அரை சதம் அடித்த ருதுராஜ் 60 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மோகித் ஷர்மா பந்துவீச்சில் மில்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்து நூர் அகமது சுழலில் கிளீன் போல்டானார். ரகானே 17 ரன் எடுத்து நல்கண்டே பந்துவீச்சில் கில் வசம் பிடிபட, கான்வே 40 ரன் எடுத்து (34 பந்து, 4 பவுண்டரி) ஷமி வேகத்தில் ரஷித் கான் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு 17 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் ஷனகாவிடம் பிடிபட்டார். கேப்டன் தோனி 1 ரன்னில் வெளியேற, ஜடேஜா 22 ரன் (16 பந்து, 2 பவுண்டரி) எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. மொயீன் அலி 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் பந்துவீச்சில் ஷமி, மோகித் தலா 2, நல்கண்டே, ரஷித், நூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. சாஹா, ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். சிஎஸ்கே பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து, 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 42 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, ரஷித் கான் 30 ரன், தசுன் ஷனகா 17 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.
சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் தீபக் சாஹர், மகீஷ் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா தலா 2 விக்கெட், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு சாம்பியன் குஜராத் அணி இந்த போட்டியில் தோற்றாலும், அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னும் ஒரு வாய்ப்பாக, நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெற உள்ள குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாட உள்ளது.