
பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை அளித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவர் தயாரித்த பேட் கேர்ள், மனுஷி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இத்திரைப்படங்கள் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த இரு திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை கோபி நாயினார் இயக்கியுள்ள நிலையில், இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணையின்போது, 25 காட்சிகளை நீக்கவும், 12 காட்சிகளை மாற்றி அமைக்கவும் தணிக்கை வாரியம் பரிந்துரை வழங்கி இருந்தது.
ஆனால், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பான தணிக்கை வாரியத்தின் தகவலுக்கு தயாரிப்பாளர் வெற்றிமாறன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தனது GRASS ROOT திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் இனி படத்தை தயாரிக்கப் போவதில்லை என்றும் தன்னைப் போன்ற நபர்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்துவது எளிதான விஷயம் அல்ல என்றும் கூறியுள்ள வெற்றிமாறன், படத் தயாரிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
வெற்றிமாறன் பேசுகையில், “பேட் கேர்ள் திரைப்படம்தான் Grass root கம்பெனியின் கடைசி படம். அதற்குப் பிறகு கம்பெனியை மூடப் போகிறோம். இயக்குநராக இருப்பது மிகவும் சுதந்திரமானது. ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது. அதனால் இந்த முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.



