
இந்தக் கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வறண்டு போகும் சூழல் ஏற்பட்டால் ஏரியின் முக்கிய பகுதிகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி, இந்த ஏரியிலிருந்து தினந்தோறும் சென்னை மக்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போன்று மழை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்தால் செட்டர்களின் வழியாக உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்து கடல்போல் காட்சி அளித்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து ஆங்காங்கே தரைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்து வருகிறது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் 19.39 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 2455 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது தினமும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் மற்றும் சிப் காட்டிற்கு 158 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
அதுமட்டுமின்றி இந்தக் கோடை காலம் முழுவதும் சென்னை மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து தண்ணீரை எடுத்துச் சுத்திகரித்து சென்னை மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் வரும் பருவ மழைக்கு முன்பாகச் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள், செட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரானது எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக இந்தக் கோடை காலத்தைச் சமாளிக்கும் வகையில் தண்ணீர் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தக் கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வறண்டு போகும் சூழல் ஏற்பட்டால் ஏரியின் முக்கிய பகுதிகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


