தமிழர்கள் நாக்கு ருசிக்கு பெயர் போனவர்கள். ஆந்திராக்காரர்களுக்கு அடுத்தபடியாக கார, சாரமாக சாப்பிட விரும்புபவர்கள்.பரோட்டா, சால்னா சாப்பிடுபவர்களில் தமிழர்களுக்கு முக்கிய இடம் உண்டு. இப்போதெல்லாம் கிராமத்திற்கு 10 கடை எனவும் ஊருக்கு 100 கடை எனவும் பரோட்டாக் கடைகள் ரொம்பவே வளர்ந்து விட்டன.பரோட்டா, கொத்து பரோட்டா, மட்டன், சிக்கன் என இரவு நேரங்களில் இதன் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீப காலங்களாக அசைவ ஓட்டல்களில் “வாழை இலை சிக்கன் பரோட்டா”, “வாழை இலை மட்டன் பரோட்டா” என 2 வகையான பரோட்டாக்கள் சாப்பாட்டுப் பிரியர்களை அள்ளுகின்றன. இந்த வகை பரோட்டாக்களை விற்பனை செய்யும் கடைகளில் வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.
வழக்கமாக கல்லில் சுட்டெடுக்கும் பரோட்டவை எடுத்து லேசாக 2 தட்டு தட்டிக் கொள்கிறார்கள். 2 மென்மையான வாழை இலையை எடுத்து ஒன்றன் மீதாக ஒன்று வைத்து, அதில் ஒரு பரோட்டாவை வைக்கிறார்கள். அதன் மீது சிறிது மட்டன் சால்னா மற்றும் அவித்த ஆட்டுக்கறியை பரப்புகிறார்கள்.அதன் மீது மற்றொரு பரோட்டாவை வைக்கிறார்கள்.மேல் பக்கமாக இன்னொரு வாழை இலையை போட்டு பார்சல் மாதிரி மடித்து, நூலால் நாலாபக்கமும் கட்டுகிறார்கள்.இதனை சூடான கல்லில் வைத்து அப்படியே வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்கள். இது போலவே வாழை இலை சிக்கன் பரோட்டாவும் தயார் செய்யப்படுகிறது.
இன்னும் சில கடைகளில் பரோட்டவை பிய்த்துப் போட்டு அதில் மட்டன் கறி மற்றும் சால்னாவை செழிப்பாக ஊற்றி சிறிய மூட்டை போல் கட்டி அடுப்பில் வைத்து தருகிறார்கள். இந்த வகை பரோட்டவை கண்டுபிடித்தது மதுரைக் காரர்கள்.பின்னர் சிவகாசி, தர்மபுரி, சேலம், திருச்சி எனப் பரவி தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் இந்த வகைப் பரோட்டவை தயாரித்து விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.