
முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 57ஆவது நினைவுநாளையொட்டிச் சென்னையில் உள்ள அவர் நினைவிடத்தில் திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் தனித்தனியாகப் பேரணியாகச் சென்று அவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
திமுக நிறுவனரும், 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவருமான அண்ணாதுரையின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது இதையொட்டிச் சென்னையில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பேரணியாகச் சென்றனர். அதன்பின் கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


