தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாகத் துபாய், புனே, குவைத், மஸ்கட், மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து வருகின்றன.
மேலும், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளிலிருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.