நடிகர் சரத்பாபு.. திரையுலக பயணம்..!  

Advertisements

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் சரத்பாபு நடித்து வந்திருந்தாலும், 1978ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் சரத்பாபுவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

Advertisements

                               அந்தப்படத்தில் இன்ஜினியர் குமரனாக வரும் சரத்பாபுவுக்கும், காளியாக நடித்திருக்கும் ரஜினிகாந்தும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் அத்தனைக் காட்சிகளும் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத நினைவுகளை மனதில் விதைத்தவை. ரஜினியோடு பின்னாட்களில் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், முள்ளும் மலரும் காலத்தால் அழிக்கமுடியாத நினைவுகள் பொதிந்தவை.அதேபோல், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற செந்தாழம்பூவில் பாடல், இன்றளவும் பலருக்கு பயணங்களின்போது தவிர்க்க முடியாத பாடலாக இருந்துவருகிறது.

இளையராஜவின் இசையில் ஜேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் காலம் கடந்தும் பலரது நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் இருவர் மட்டுமின்றி, சரத்பாபுவின் சாந்தமான முகமும், அவரது பாங்கான நடிப்பும்கூட ஒரு காரணம்முள்ளும் மலரும் திரைப்படத்துக்குப் பின்னர், சரத்பாபு நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், 1987ல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய வேலைக்காரன் திரைப்படத்தில் ராஜ்குமார் என்ற பணக்கார கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது ஹோட்டலில் வேலைக்காரராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். நடிகர் ரஜினிகாந்த்தின், ரசிகர்கள் அவருக்காக எதையும் செய்ய காத்திருந்த காலம் அது. இதனால், அவரைத் திட்டுவது,அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க நடிகர்கள் பலரும் தயங்கினர். ஆனால், ரஜினியும் சரத்பாபுவும் ஒன்றாக நடித்த திரைப்படங்களான வேலைக்காரன், முத்து, அண்ணாமலை இந்த படங்களில் எல்லாம் சரத்பாபு ரஜினியை அடித்துவிடும் காட்சி அல்லது திட்டிவிடும் காட்சிகள் இருந்தன. ஆனால், திரைப்படத்தைத் தாண்டிய ரஜினி-சரத்பாபுவின் நட்பு அத்தைகய காட்சிகளை ரசிகர்களை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தது.

குறிப்பாக அண்ணாமலை திரைப்படத்தில், ரஜினியின் நண்பனாக அசோக் கதாப்பாத்திரத்தில் வரும் சரத்பாபுவை யாரும் மறக்கமாட்டார்கள். உண்மையான நண்பர்கள் இருவர் சண்டை போட்டு பிரிந்த உணர்வையே அந்தப்படத்தில் வரும் காட்சிகள் கொடுத்திருக்கும். முத்து படத்தில் வரும் முதலாளி கதாப்பாத்திரமும் அப்படித்தான். இந்த காட்சிகளில் எல்லாம் சரத்பாபுவைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும், அது பொருத்தமானதாக இருந்திருக்காது.

நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல, கமல்ஹாசனின் பல முக்கியமான திரைப்படங்களிலும் சரத்பாபு இடம்பெற்றிருப்பார். கமலின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து இந்த இரண்டு படங்களும் படத்தின் நாயகனான கமல் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைத்துப் பாத்திரங்களையுமே ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்த திரைப்படங்கள். இந்த இரண்டு படங்களிலும் கமலுடன் இணைந்து சரத்பாபு நடித்திருப்பார். கமல்ஹாசனுடன் சரத்பாபு தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். இவர்கள் இணைந்திருப்பது போல் வரும் காட்சிகள் ரொம்பவே அழகானதாகத் தெரியும். நட்பை மையமாக வைத்து வெளிவந்த சட்டம் திரைப்படத்தில் இருவரும் நண்பராக நடித்தனர். தொடர்ந்து பல படங்களில் இருவரும் நடித்து வந்தனர். கால ஓட்டத்தில், ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் மாமனராக சரத்பாபு நடித்திருப்பார்.

இந்த வரிசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பகல்நிலவு. நேர்மையான இன்ஸ்பெக்டராக பீட்டர் கதாப்பாத்திரத்தில் சரத்பாபு நடித்திருப்பார். பெரியவராக வரும் சத்யராஜிடம் முறைத்துக் கொள்ளும் காட்சிகளிலும், முரளியுடன் நடுத்தெருவில் சண்டையிடும் காட்சிகளிலும் சரத்பாபு சிறப்பாக நடித்திருப்பார். ரேவதியிடம் பாசத்தைக் காட்டும் காட்சிகளிலும், ராதிகாவை காதலிக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பை தேவையான அளவில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பார்.

சரத்பாபுவின் அமைதியான தோற்றம் அவருக்கு நல்ல மனிதரை பிரதிபலிக்கும் பாத்திரங்களில் தோன்றும் வாய்ப்பையே அவருக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தது. உதாராணத்துக்கு நேர்மையான காவல்துறை அதிகாரி, மருத்துவர், இன்ஜினியர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் இதுபோன்ற உயர் பொறுப்புகளில் ஒரு படித்த மிடுக்கான அதிகாரி இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு சரத்பாபு மிகவும் பொருத்தமானவராக இருந்துவந்தார். அல்லது ஒரு பெரும்பணக்கார இளைஞர் என்ற பாத்திரத்துக்கும் சரத்பாபுதான் என்ற நிலைதான் இருந்து வந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி, கமல், என தலைமுறைகள் கடந்த நடிகர்களுடன் தனது திரை பயணத்தை பங்கிட்டுக் கொண்ட நடிகர் சரத்பாபுவை தமிழ்த்திரையுலகம் எப்போதுமே ஒரு ஜென்டில்மேனாகவே பார்க்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.      

                                                                                                   
             கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் செயல் இழந்து வந்தன. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் சரத்பாபு உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது .  இந்நிலையில், மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சரத்பாபுவின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், சரத்பாபு நடிகர் ஆவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள். நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர், என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் சரத்பாபு. நாங்கள் இணைந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள்’ என்று அவர் கூறினார்.இதைபோல  திரையுலக நட்ச்சதிரங்கள் நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *