
உலக கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் விராட் கோலி. இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டி கோலியின் 500-வது சர்வதேச போட்டியாகும்.
34 வயதாகும் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘ரன் மெஷின்’ என ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் அழைக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய அளவில் 500 போட்டிகளைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். சர்வதேச அளவில் இந்த சாதனையை எட்டியுள்ள 10-வது வீரராகவும் கோலி உள்ளார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள வாழ்த்து போஸ்டர் 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் ‘ரன் மெஷின்’ விராட் கோலி!
அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் டெஸ்டில் 28 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களையும், டி20 போட்டியில் 1 சதம் என மொத்தமாக 75 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். உலக அளவில் அதிக சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 500-வது போட்டியில் விளையாடும் கோலிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

