நீலகிரி வரையாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர், வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 13 ராம்சாட் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
கலை இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றின் முக்கிய அங்கமாக யானைகள் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு ஆழமானது என்றும் 2,800 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை யானைகள் சரணாலயத்தை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யானைகள் இறப்பு குறித்து விரிவான பகுத்தாய்வு செய்வதற்கு கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ. 20 கோடியில் அமைக்கப்படும். தஞ்சை மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.3.70 கோடியில் மேற்கொள்ளப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடியில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்சதுப்பு நிலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.20 கோடியில் பள்ளிக்கரணையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஈர நிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் மையம் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பறவை காப்பாளர்களுக்கு கல்வி தொடர்பான தகவல்களை மையம் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.