அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதுவை குஜராத் உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை குஜராத்தின் சூரத் நீதிமன்றம், திடீரென கடந்த மார்ச் 23-ந் தேதி விசாரித்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சூரத் நீதிமன்றம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் அவரது பதவி பறிபோகும். இதனடிப்படையில் ராகுல் காந்தியின் லோக்சபா எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 13-ந் தேதி விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்படவில்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் தரப்பு வாதம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மே 2-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மே 4-ந்தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று முற்பகல் 11 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்த கோரும் கோரிக்கையையும் குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய நிலையில் ராகுல் காந்தியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் பங்கேற்க முடியாது.