புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் வாதத்தை முன் வைத்தன. ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் நலன் கருதி இது போன்ற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள் என்றும் புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு சரிதான் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆணையால் பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் முறையிடவும் புகையிலை நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.