
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில், நேற்று அதிகாலை துப்பாக்கியால் சரமாரியாகச் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராணுவ முகாமின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து கிடந்தனர். இது பயங்கரவாதத் தாக்குதல் கிடையாது என்றும், ராணுவ வீரர் ஒருவருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல் என்ற ராணுவ வீரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில், கமலேஷின் என்பவர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை ரவி, தாய் செல்வமணி ஆகியோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர். திருமணமாகாத நிலையில், பதிண்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் கமலேஷ் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதேபோன்று, ராணுவ முகாமில் உயிரிழந்த 19 வயதான யோகேஷ்குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இதையடுத்து இருவரது உடல்களையும் இன்று சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
