ஜூலை 11. தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் நாளை முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் மாநிலம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.