தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாத இறுதியில் வெளிநாடு செல்கிறார்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 நாள் பயணமாக துபாய் சென்றார். அப்போது, அங்கு நடைபெற்ற ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழக அரங்கத்தை திறந்துவைத்தார். மேலும், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் அபுதாபி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்த நிலையில், 2,600 கோடிக்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் மே 23-ந் தேதி லண்டன் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து ஜப்பான், சிங்கப்பூர், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டென்மார்க் சென்றுள்ளார். அங்குள்ள தொழில் முதலீடு வாய்ப்பு குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.