சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன-இந்திய வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப்பின், கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சுமுக நிலை திரும்பவில்லை. அங்குள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்க சீனா மறுப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எனவே சீனாவுடனான எல்லையை மிகவும் விழிப்புடன் கண்காணிக்குமாறு ராணுவத்துக்கு, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் நடந்து வரும் ராணுவ தளபதிகளுக்கான மாநாட்டில் உரையாற்றிய அவர், இது தொடர்பாக பேசினார். அப்போது எல்லையில் பணிபுரியும் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்று உறுதியளித்தார். டெல்லியில் கடந்த 17-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில், தேசபாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையில் படைகளின் தயார்நிலையை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாட்டு முடிவில் ராணுவத்துக்கான முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.