வெயில் தாக்கத்தையொட்டி ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில்,வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், பணியிடங்களில் போதிய வசதிகள், போதிய காற்றோட்டம், ஓய்வு எடுக்க நேரம், வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.