இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த மத்திய ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் புதுமையாக அதிநவீன வசதிகள் கொண்ட வேகமாக செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முற்றிலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 26 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பயண நேரம் குறைவு, விமானத்தை போல சொகுசு வசதிகள் இருப்பதால் அதிக கட்டணம் என்றாலும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மேலும் பல வந்தே பாரத் ரெயில்கள் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பெட்டிகள் அமைத்தும் உலக புகழ் பெற்ற சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெறும் இருக்கைகள் மட்டுமே கொண்ட இந்த ரெயிலில் விரைவில் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வந்தேபாரத் ரெயிலின் அடையாளமாக அதன் வண்ணம் வெள்ளை மற்றும் நீல கலரில் இருந்து வருகிறது. இதனை ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிற வண்ணமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரெயில் பெட்டிகளின் இருபுறமும் ஆரஞ்சு வண்ணமும், கதவுகளில் சாம்பல் வண்ணமும் அடிக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ரெயில் பயணிகளின் கருத்தும் கேட்கப்பட உள்ளது. அவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்திலான ரெயில் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ரெயில்வே அமைச்சகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் வந்தேபாரத் ரெயிலின் வண்ணமும் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெள்ளை நிறம் என்பதால் எளிதில் தூசு படிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரெயில் பெட்டிகளை கழுவினாலும் அதனை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை என்ற நிலையும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த வண்ண மாற்றம் வர உள்ளது. ரெயில்வே அனுமதி கிடைத்ததும் வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் ஆரஞ்சு மற்றும் சாம்பல் கலரில் உருவாக உள்ளது. விரைவில் சென்னை- விஜயவாடா வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.