அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து, தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரியும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதம் முடிந்துவிட்ட நிலையில், பிற மனுதாரர்களுக்கு மூத்த வழங்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அப்போது ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் பெறாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது என்றும், கட்சி உறுப்பினரையோ, நிர்வாகியையோ நீக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், திடீரென ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை அவர்களே எழுப்பி, அவர்களே அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இது ஒன்றரைக் கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம் கிடையாது என்றும் அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, பொதுச்செயலாளரின் நடவடிக்கைகள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற விதி உள்ளதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டதாகவும் அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.