அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

Advertisements

அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலக்குழியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர்கள் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகளான ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 7 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடைபெற்றது.

Advertisements

அப்போது வழக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்ட காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆசிரமத்தில் இருந்து 167 பேர் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், தனியார் காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 34 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆதரவற்றோர் இல்லம் நடத்தியதன் மூலம் மனுதாரருக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு காவல்துறை தரப்பில், பல்வேறு இடங்களில் இருந்து நிதி பெறுவதாகவும், உடல் உறுப்பு விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசிடம் ஒப்புதல் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சேவையாக இந்த ஆசிரமத்தை நடத்தி வருவதாகவும், கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் இருந்து பலர் இந்த ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுப்பிய மருந்துகளே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், ஒரு புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமின் வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20 ஆண்டுக்கு மேலாக சேவை செய்யும் ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில் 2 மாதங்களாகியும் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என கூறி, ஆசிரம நிர்வாகிகள் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 7 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 7 பேரும் சென்னையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிபந்தனை விதித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *