அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

Advertisements
Advertisements

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலைஅடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டு முறைப்படி பொதுச்செயலாளராகவும் அவர் தேர்வு ஆனார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் தேர்தல் ஆணையம் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் விவகாரத்தில் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டது. இதற்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளை முடிவடைகிறது

இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமிக்கு முறைப்படி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் 2 முக்கியமான விஷயங்களை அ.தி.மு.க. சார்பில் முறையிட்டு கேட்டு இருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

இதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி அ.தி. மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று பிற்பகல் தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. விவகாரத்தில் பரபரப்பு திருப்பமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. தற்போது எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *